வாடிக்கையாளர் வேடத்தில் சென்ற பெண் பொலிஸ்; வசமாக சிக்கிய கருக்கலைப்பு வைத்தியர்!
களுத்துறை மாவட்டம் பேருவளை பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாகச் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸ் அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர் போல நடித்து கருக்கலைப்புக்காக நேரத்தை முன்பதிவு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, களுத்துறை நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் நேற்று விசேட பொலிஸ் குழுவினர் குறித்த நிலையத்திற்குச் சென்றனர்.
அங்கு மாறுவேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்யத் தயாரான போதே, அந்த வைத்தியர் கையும் மெய்யுமாகப் பிடிபட்டார்.
ஒரு கருக்கலைப்புக்காக குறித்த நபர் 45,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை அறவிட்டு வந்துள்ளார்.
சோதனையின் போது கருக்கலைப்புக்காகப் பயன்படுத்தப்படும் பெருமளவிலான தடை செய்யப்பட்ட மருந்து வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸார் அதிரடியாகக் கைது நடவடிக்கையை மேற்கொண்ட போது, அங்கிருந்த வைத்தியரின் உதவியாளர் பயத்தில் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, பொலிஸ் அதிகாரிகளுக்குப் பெரும் தொகையை இலஞ்சமாக வழங்க அந்த மருத்துவர் முயற்சி செய்துள்ளார். எனினும், அந்த முயற்சியை முறியடித்த பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் ஒரு முன்னாள் வைத்திய அதிகாரி என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
