இஸ்லாமிய இளைஞனுடன் காதல் வயப்பட்ட இந்துப்பெண் ; அரங்கேறிய கொடூரம்!


இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர் ஜோடி ‘ஆணவக் கொலை’ செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த கிராம மக்களிடையே, இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் உம்ரி கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய காஜல் (இந்து) மற்றும் 27 வயதுடைய முகமது அர்மான் (முஸ்லிம்) ஆகியோரது உடல்கள், கடந்த ஜனவரி 21ஆம் திகதி ஆற்றங்கரையோரம் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜனவரி 18 மற்றும் 19ஆம் திகதிகளுக்கிடையிலான இரவில், அர்மான் தனது காதலியான காஜலைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது காதலர்களை காஜலின் மூன்று சகோதரர்கள் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர். ஆத்திரமடைந்த அவர்கள், இருவரையும் மண்வெட்டியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த பின்னர், உடல்களை இரகசியமாக புதைத்துள்ளனர்.

கொலை செய்ததை மறைக்க முயன்ற காஜலின் சகோதரர்கள், ஜனவரி 20ஆம் திகதி அர்மான் தங்களது சகோதரியை கடத்திச் சென்றதாக காவல்துறையில் பொய்முறைப்பாடு செய்துள்ளனர். எனினும், அவர்களின் வாக்குமூலங்களில் காணப்பட்ட முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை மேற்கொண்ட தீவிர விசாரணையில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

இதையடுத்து, உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்த காவல்துறை, காஜலின் மூன்று சகோதரர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

சுமார் 400 குடும்பங்கள் வசிக்கும் உம்ரி கிராமத்தில் இதுவரை மத ரீதியான மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கும் நிலையில், இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் கிராமத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் மட்டும் 38 கௌரவக் கொலைகள் உத்தியோகபூர்வமாகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.