சிம் அட்டைகளை பதிவு செய்யும் ஒழுங்குவிதிகளை திருத்த அமைச்சரவை அனுமதி!
2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளை மீள்பதிவு செய்யவும், சிம் அட்டை விநியோகத்தில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடைமுறையிலுள்ள 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், அதற்குப் பின்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
2019 ஓகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பல வாடிக்;கையாளர்களின் முழுமையான தகவல்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இல்லாததினால் குற்றச் செயல்கள் தொடர்பான சட்டப் புலனாய்வுகளின் போது சரியான தகவல்கள் இல்லாதது பெரும் தடையாக உள்ளது.
இதனால் 2019 ஓகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன்னர் பெறப்பட்ட பழைய சிம் அட்டைகளின் உரிமையாளர் தகவல்கள் மீண்டும் முறைப்படி பதிவு செய்யப்படும்.
இதுவரை முறையாக உள்வாங்கப்படாத 16 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களை வாடிக்கையாளர்களாக பதிவு செய்யப் புதிய ஏற்பாடுகள் செய்யப்படுவதுடன் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சிம் அட்டைகளை வழங்குவதில் புதிய ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படும்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
