யாழில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 17 வயது சிறுவன்; பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்!
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் உடற்கூற்று பரிசோதனை வெளியாகியுள்ளது.
அதன்படி, துப்பாக்கி தோட்டா நெற்றியில் பட்டு, தலைக்குள் ஊடுருவி மூளையை துளைத்து சென்றமையால் மரணம் சம்பவித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்தார்.
இந்நிலையில், சிறுவனது உடற்கூற்று பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் நடைபெற்றது.
அதன்போது துப்பாக்கி சன்னம் சிறுவனின் நெற்றியில் பட்டு ஊடுருவி தலையில், மூளையை தாக்கியமையால் மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (17 வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது மேலும் இரண்டு இளைஞர்கள் குறித்த வாகனத்தில் இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாரும், யாழ். மாவட்டக் குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
