குறைக்கப்பட்ட எரிபொருள் விலை ; பேருந்து கட்டணம் குறித்து வெளியான முக்கிய தகவல்
எரிபொருள் விலையில் சிறிய அளவிலான வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடலாம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன்னதாக பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பேருந்துகளை இயக்குவது கடினமாகி உள்ளதாக சுட்டிக்காட்டிய தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, முன்னைய பேருந்து கட்டணத் தேசிய கொள்கைக்கு அமைவாக, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் 2 முதல் 3 கிலோமீற்றர் வரை பயணிக்க முடிந்ததாகவும் கூறினார்.
எனினும், தற்போது அந்தத் தூரம் கணிசமாக குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, இப்பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலில் 2 கிலோமீற்றருக்கும் குறைவான தூரமே பேருந்துகள் பயணிக்க முடிவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 5 முதல் 6 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
