நாளாந்தம் சுமார் 100 புற்றுநோயாளர்கள் பதிவு!
இலங்கையில் புற்றுநோய் பாதிப்பு அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாகச் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹம்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவு (OPD) வளாகத்தில் அமைந்துள்ள தொற்றுநோய் சிகிச்சை கட்டடத்தின் முதலாவது மாடியில், 'புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் புதிய மத்திய நிலையம்' இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார்.
இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இந்நோய் காரணமாகத் தினமும் சுமார் 40 பேர் வரை உயிரிழக்கின்றனர்.
பெரும்பாலான நோயாளர்கள் புற்றுநோயின் முற்றிய நிலையிலேயே (பிற்கால கட்டங்களில்) சிகிச்சைக்காக வருகின்றனர். இதுவே அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமாகிறது.
தற்போது 6 பிரதான வைத்தியசாலைகளில் இத்தகைய நிலையங்கள் உள்ளன. எதிர்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதனை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி:நாள்தோறும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ளாகின்றனர்.அவர்களில் தினசரி மூவர் உயிரிழக்கின்றனர்.
20 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுய மார்பகப் பரிசோதனையை (Self-examination) மாதந்தோறும் மேற்கொள்ள வேண்டும். மேலும் 20 - 40 வயதுடையோர்: மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும்.
40 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் வைத்தியசாலைக்குச் சென்று மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
