போதைப்பொருள் பாவித்த சாரதிகளைக் கண்டறிய நடமாடும் ஆய்வுகூடம்!


போதைப்பொருள் மற்றும் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக நடமாடும் ஆய்வுகூடம் ஒன்று தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் அல்லது மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 7,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

“மது அருந்துவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதனை நாம் மறுப்பதில்லை. ஆனால் மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்தக் கூடாது. அவ்வாறு மது அருந்தினால், மது அருந்தாத ஒருவரை சாரதியாக அழைத்துச் செல்லுங்கள். இல்லையெனில் வாடகை வாகன சேவையையோ அல்லது மாற்றுச் சாரதியையோ பயன்படுத்துங்கள்”
என்று தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த வருடம் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 31 சதவீதம் பாதசாரிகளாகவும், 31 சதவீதம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாகவும், 7 முதல் 8 சதவீதம் வரை பின்னால் அமர்ந்து பயணித்தவர்களாகவும் இருந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் பரிசோதனைக்காக தற்போது ஒரு தொகுதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தேசிய மருத்துவ நிறுவகத்திடம் உள்ள நடமாடும் ஆய்வுகூடம் மூலம் ஹெரோயின், கஞ்சா, பாபுல் மற்றும் ஐஸ் ஆகிய நான்கு வகையான போதைப்பொருட்களை பரிசோதிக்கும் வசதி இருப்பதாக கூறினார். அந்த மருத்துவ வாகனத்தையும் இணைத்துக்கொண்டு தற்போது சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் போதைப்பொருள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாகப் பாயும் என அவர் வலியுறுத்தினார்.