நாட்டில் முன்பள்ளிக் கல்வி முறைமையில் அதிரடி மாற்றங்கள்!


இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறையை ஒன்றிணைத்து, அதனை ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற "சிறுவர் சுகாதார மேம்பாட்டிற்கான தேசிய தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டத்தின்" அங்குரார்ப்பண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு குழந்தையின் எதிர்காலம் மற்றும் நாட்டின் நீண்டகால மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் ஆரம்பகால பிள்ளைப் பருவ அபிவிருத்தி தீர்மானமிக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பகால பிள்ளைப் பருவ அபிவிருத்தி என்பது பெற்றோரின் தனிப்பட்ட பொறுப்பு மாத்திரமல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தினார்.

ஆரம்பகால பிள்ளைப் பருவ அபிவிருத்தியை கல்வித்துறையின் ஒரு விசேட பிரிவாக அங்கீகரித்து, யுனிசெப் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.