உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ள ஹரிணி அமரசூரிய!
உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகி, 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கவுள்ளார்.
பிரதமருடன் இணைந்து பிரதி நிதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவும், வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் அங்கு செல்லவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுத் தலைவர்கள், கொள்கை நிர்ணயாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான நடைமுறை வழிகள் குறித்து அவர் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
உலகின் அரசியல், பொருளாதார திசைகளை தீர்மானிக்கும் முக்கிய மேடையாகக் கருதப்படும் டாவோஸ் மாநாட்டில் இலங்கைப் பிரதமரின் பங்கேற்பு, நாட்டின் பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கு சர்வதேச கவனத்தை மேலும் ஈர்க்கும் என அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
