இலங்கையில் வரலாறு காணாத மாற்றத்தை பதிவு செய்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இன்று (28) நிலவரப்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டொலர் 5,250 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு தங்கச் சந்தை இன்று காலை வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, உள்ளூர் சந்தையில் தங்கத்தின் மொத்த விலை சுமார் ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை ரூ.374,600 ஆக பதிவாகியுள்ளது.

அதேவேளை, நேற்று ரூ.394,000 ஆக இருந்த ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை, இன்று ரூ.405,000 ஆக உயர்ந்துள்ளதாக தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, நகை வாங்கத் திட்டமிடுபவர்கள் விலை சற்றுக் குறையும் வரை காத்திருக்கலாம் என ஆலோசனை வழங்கப்படுகிறது.

இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக சர்வதேச சந்தை போக்கு மற்றும் உள்ளூர் தேவை அதிகரிப்பு ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றன.