நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வைத்தியர்களின் போராட்டம்: வெளியான முக்கிய அறிவிப்பு


தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை அரசாங்கம் விரைவாக வழங்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் தீர்மானம் தொடர்பான அறிவிப்பை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மருத்துவர்களின் போராட்டம் தொடர்பான இந்த முக்கிய அறிவிப்பு இன்று (28.01.2026) வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நடைபெறவுள்ள சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர், எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அவை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளில் கிடைக்காத மருந்துகளை வெளியிலுள்ள மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக துண்டுச் சீட்டுகளை வழங்குவதை நிறுத்துதல் உள்ளிட்ட 05 கோரிக்கைகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஐந்து கோரிக்கைகளை முன்நிறுத்தி, கடந்த திங்கட்கிழமை காலை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.