வட மாகாணத்தில் நாளை 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் குதிக்கும் தாதியர்கள்!


வடக்கு மாகாணத்தில் நாளை (12) காலை 7 மணிமுதல் மறுநாள் (13) காலை 7 மணி வரை 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதியர் உத்தியோகத்தர்களின் வருகை மற்றும் புறப்படல் பதிவுக்காக, ஏனைய ஊழியர்களுடன் சேர்ந்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்த வேண்டும் என எடுத்துள்ள முடிவுக்கு எதிராக இப்போராட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,
வடக்கு மாகாணத்தைத் தவிர மற்ற மாகாணங்களிலும் மத்திய அரசாங்கத்தின் வைத்தியசாலைகளிலும் இத்தகைய நடைமுறை எங்கும் அமுலில் இல்லையெனவும், வடக்கு மாகாணத்தில் மாத்திரம் இதை தன்னிச்சையாக அமுல்படுத்துவது பாரிய பிரச்சினை எனவும் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது:
தாதியர்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சாதாரண கடமை நேரங்கள், மேலதிக கடமை நேரங்கள், வாராந்த ஓய்வு நாட்கள் மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களில் பணிபுரிகின்றனர். இதன் அடிப்படையில் வழங்கப்படும் பல்வேறு கொடுப்பனவுகளுக்கான கணக்கீடுகள் தனித்தனி வருகைப் பதிவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்தவகையில், அனைத்து ஊழியர்களும் ஒரே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவது, பல்வேறு கடமை நேரங்களை தெளிவாக அடையாளம் காண்பதில் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் மேலதிக கடமைகளுக்கான கொடுப்பனவுகளைப் பெறுவதிலும் தாதியர்கள் பாதிக்கப்படலாம் என சங்கம் எச்சரித்துள்ளது.