கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!
‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டை விட்டு தப்பியோடிய அவர் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) மற்றும் நேபாள பொலிஸார் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 19 அன்று வாழைத்தோட்டம் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உதவியதாகக் கூறப்படும் ‘இஷாரா செவ்வந்தி’ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கடந்த செப்டெம்பர் மாதம் தெரிவித்தது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் பிறரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.