வாடகைக்கு முச்சக்கரவண்டியை ஓட்டியபடி, போதைப்பொருட்களை லொகேசன் டிலிவரி முறையில் விநியோகித்து வந்த இருவர் கைது!


கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரையில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களை வட்டவளை காவல்துறையினர் இன்று (13) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 25 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் வெலிமடைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், கொழும்பு, மருதானை பகுதியில் வாடகைக்கு முச்சக்கரவண்டியை ஓட்டுபவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர்கள், ‘ஈசி கேஷ்’ (Easy Cash) முறையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, வீதிகளில் அடையாளம் காணப்பட்ட சில இடங்களில் போதைப்பொருளை வைத்துவிட்டுச் செல்லும் முறையைக் கையாண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மருதானையில் இருந்து வெலிமடை நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்த இவர்களை, வட்டவளை காவல் நிலையத்தின் முன்னால் உள்ள சோதனைச் சாவடியில் வைத்து சோதனையிட்டபோது, கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் ஆகிய போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இவர்களிடமிருந்து 4 கைபேசிகளும், 23 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.