புதையல் தோண்டிய பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் கைது!


அநுராதபுரம் ஷ்ரவஸ்திபுர பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவி உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வியாழக்கிழமை (14) அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் இதன்போது உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த 13 ஆம் திகதி ஷ்ரவஸ்திபுர திபிரிகடவல பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு அருகில் சிலர் புதையல் தோண்டுவதாக அனுராதபுரம் பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் அங்கிருந்த பெண் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்திருந்தனர்.

பதுளை, மாளிகாதென்ன, பதவிசிறிபுர, கிராந்திரகோட்டை, வறக்காபொல மற்றும் அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய கைது செய்யப்பட்ட குறித்த பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவி என மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் அவர் புதையல் தோண்டும் தரப்பினரை பாதுகாப்பதற்காக குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் நேற்றைய தினம் அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.