வசமாக மாட்டிக்கொண்ட ராப் பாடகர் வேடன்! இளம்பெண் மருத்துவரின் பாலியல் புகாரால் பரபரப்பு!


கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் மீது, இளம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை பணம் பெற்றதோடு, பின்னர் விலகி விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண். Instagram மூலமாகவே இருவருக்கும் நட்பு உருவாகி, அதன் பின்னர் நெருங்கிய உறவாக மாறியதாகவும், திருமண வாக்குறுதி அளித்தவேடன், அந்த நம்பிக்கையை துஷ்பிரயோகப்படுத்தியதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு, எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரை காவல் நிலையத்தில் வேடன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

‘வேடன்’ என்ற மேடைப் பெயரில் பரிச்சயமான ஹிரந்தாஸ் முரளி, கேரளாவின் திருச்சூரில் பிறந்தவர். இவரது தாய் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழராவார். சமீப நாட்களில் இவரது மலையாள ராப் பாடல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி, ரீல்ஸ் மற்றும் ஸ்டோரி வீடியோக்களில் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே இவருக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ரசிகர்கள் தொகுதி பெரிதாக வளர்ந்துள்ளது.

இவரது இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் திரண்டும், இவரது பாடல்களை நேரில் கேட்பதற்காக காத்தும் வருகின்றனர். இவ்வாறான நிலையில், இளம் பெண்ணின் புகாரால் வேடன் மீதான மதிப்பிலும், அவருடைய பிரபலத்திலும் தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கை தொடர்ந்து வேடன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.