உத்தரகாண்ட் அரசு ஊழியர்கள் ரூ.5000க்கு மேல் பொருள் வாங்க உயர் அதிகாரி அனுமதி கட்டாயம்!


உத்தரகாண்டில் அரசு ஊழியர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் எந்த பொருள் வாங்கினாலும் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட்டில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான், அம்மாநில அரசு ஊழியர்களின் கோபத்தை சம்பாதித்துள்ளது. இதற்கு கடந்த 14ம் தேதி உத்தரகாண்ட் அரசு போட்ட உத்தரவு தான் காரணம்.

அதாவது அரசு ஊழியர்கள் அதிகளவில் சொத்து வாங்கி குவிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. மேலும் அதுதொடர்பான அரசாணையும் வெளியிட்டுள்ளது. இதுதான் அரசு ஊழியர்களின் கோபத்துக்கு முக்கிய காரணமாகும்.

உத்தரகாண்ட் அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛எந்த அரசு ஊழியர்களாக இருந்தாலும் கூட தங்களின் ஒரு மாத ஊதியம் அல்லது ரூ. 5,000-ஐ விட அதிகமான மதிப்புள்ள எந்தவொரு அசையும் சொத்தையும் விற்பனை செய்தாலோ அல்லது சொத்து, பொருட்களை வாங்கினாலோ, அல்லது வேறு வழியில் பணப்பரிவர்த்தனை செய்தாலோ அதுபற்றி உயரதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறுை அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து விவரங்களை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அசையா சொத்துகளை தானமாக கொடுத்தாலும் அரசிடம் தெரிவிக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தான் அரசு ஊழியர்களை கோபப்படுத்தி உள்ளது.