காற்று மாசு குறித்து வெளியான செய்தி!


2024 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் காற்று மாசுபட்ட நகரங்களின் முதல் 50 பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை. இருப்பினும், 51ஆவது இடத்தில் இலங்கை உள்ளது என்று சுவிஸ் காற்று தர கண்காணிப்பு நிறுவனமான IQAir தெரிவித்துள்ளது. இலங்கையின் காற்றின் தரம் மோசமடைந்து வருவதாக பல மாதங்களாக ஊடகங்களில் வெளியான தொடர் செய்திகளுக்குப் பிறகு, இந்த தகவல் வெளியாகியுள்ளது.


IQAir அறிக்கையின்படி, சிறிய மற்றும் ஆபத்தான காற்றில் பரவும் துகள்களின் சராசரி செறிவு PM2.5 ஆகும். இந்த துகள்கள் சுவாசத்தில் உள்ளிழுக்கப்படும் போது குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன, மேலும் நுரையீரலுக்குள் ஆழமாகச் செல்லும் வாய்ப்பும் உள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO), 5 µg/m³ க்கும் அதிகமான PM2.5 அளவுகளை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக கருதுகிறது. மேலும், 24 மணி நேர சராசரி வெளிப்பாடுகள் வருடத்திற்கு 3 - 4 நாட்களுக்கு மேல் 15 µg/m³ ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்று WHO பரிந்துரைக்கிறது.


கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் மற்றும் மொனராகலை மாவட்டங்கள் ஆரோக்கியமற்ற காற்றின் தர அளவைப் பதிவு செய்திருந்த போதிலும், நாட்டின் பிற பகுதிகள் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், கடந்த டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை, நாட்டின் காற்றின் தரம் கடுமையான அளவை எட்டியிருந்தது. இதற்கு அண்டை நாடுகளின் காற்று தெற்கே நாட்டிற்கு நகர்ந்ததே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.