இவ்வாண்டில் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடங்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்தார். இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025 இல் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூடிய போது, பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
புதிய கல்வி மறுசீரமைப்பு ஐந்து பிரதான தூண்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என குழுவின் தலைவர் குறிப்பிட்டார். இந்த மறுசீரமைப்பின் கீழ் புதிய பாடநெறி அறிமுகப்படுத்தல், மனிதவளத்தை மேம்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், பொது மக்களை விழிப்புணர்வூட்டல் மற்றும் உரிய மதிப்பாய்வு மேற்கொள்ளல் போன்ற முக்கிய விடயங்கள் இடம்பெறும். 2026 ஆம் ஆண்டில் இந்த முறையை தரம் ஒன்று முதல் தரம் ஆறு வரையிலான மாணவர்களுக்காக அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி தொடர்பான அமைச்சு தற்போது ஆறு உப குழுக்களை அமைக்கப்போவதாகவும், அவை கல்வி மறுசீரமைப்பு, பாடசாலைகளில் உள்ள பௌதீக மற்றும் மனித வளக் குறைபாடுகள், இடைத்தர வகுப்புகளுக்கான மாணவர் அனுமதிகள், கல்விச்சபை நிறுவல், உயர் கல்வி மற்றும் திறன்கல்வி பிரிவுகளுக்கு அடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கையாளும் என்று அவர் கூறினார்.
மேலும், குறித்த அமைச்சின் ஆலோசனைக் குழுவுடன் கலந்துரையாடப்பட்ட போது, கல்வி மறுசீரமைப்பு, பாடசாலைகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல், பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், கட்டுமானப் பணிகளுக்கான நடவடிக்கைகள் மற்றும் பாடசாலைகளின் பாதுகாப்பற்ற சூழல்களை புனரமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் முன்னிட்டு, இந்த மறுசீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.