நாட்டில் வேகமாக பரவிவரும் சிக்குன்குனியா!
இலங்கையில் நுளம்புகளால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியா (Chikungunya) வேகமாகப் பரவி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த நோய் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பாக மருத்துவ ஆலோசகர் அச்சலா பாலசூரிய தெரிவித்ததாவது, சிக்குன்குனியா என்பது தொற்றுள்ள ஏடிஸ் நுளம்புகள் (Aedes mosquitoes), ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) ஆகியன கடித்தால் பரவுகிறது.
இந்த தொற்றுள்ள நுளம்புகள் சுமார் 4 முதல் 7 நாட்கள் அடைகாக்கும் காலத்திற்குப் பிறகு, வைரஸை பரப்பும் திறன் பெறுகின்றன. இவை அதிகாலை மற்றும் பிற்பகல் நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும், பூந்தொட்டிகள், டயர்கள், வாளிகள் மற்றும் அடைபட்ட வடிகால் போன்ற கொள்கலன்களில் தேங்கி நிற்கும் நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன.
இந்த நோய் ஒருவருக்கு நேரடியாகப் பரவுவதில்லை. நுளம்பு கடித்தால் மட்டுமே பரவுகிறது. இதன் முக்கிய அறிகுறிகளில் திடீரென அதிக காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் தோல் வெடிப்புகள் ஆகியவை அடங்கும்.
பெரும்பாலான நோயாளிகள் ஒரு வாரத்திற்குள் குணமடைந்தாலும், மூட்டு வலி சில சமயங்களில் மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட நீடிக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு இந்த வலி நீண்டகாலம் தாக்கும் என்று மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவது மட்டுமே, இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ள வழி என்று மருத்துவ ஆலோசகர் அச்சலா பாலசூரிய வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கை முழுவதும் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதன் அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழிப்பதன் மூலம் இந்த நோயைத் தடுக்க முடியும் என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.