இவ்வாண்டுக்கான ஆசிரிய நியமனங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

 

இந்த ஆண்டு ஆசிரியர் சேவையில் 7,913 நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார்.


மேலும், அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது, இது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதாகவும், அதற்கான தீர்மானத்தின் அடிப்படையில் செயற்படப்படும் என அவர் கூறினார். 


அதிபர் சேவையில் 1610 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், கடந்த ஜனவரி மாதம் கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகள் எடுத்து, வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 


அதேபோல், கல்வி நிர்வாக சேவையில் 1331 வெற்றிடங்கள் உள்ள நிலையில், 422 பேருக்கு நியமனங்களை வழங்க அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பதவிக்கான பரீட்சை நடைபெற்றபோதும், நியமனங்கள் வழங்கப்படவில்லை. 


ஆசிரியர் கல்வி சேவையில் 1310 வெற்றிடங்கள் காணப்படுவதால், முதல் கட்டமாக 706 பேருக்கு நியமனங்களை வழங்க அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.