புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரம் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை!


புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

புதிய கடவுச்சீட்டில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தரப் பிரச்சினை காரணமாக, இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

குறித்த கடவுச்சீட்டை இயந்திரம் மூலம் முறையாக வாசிக்க முடியாததால், அது போலியான கடவுச்சீட்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் பிரித்தானிய அதிகாரிகளுக்கு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை கடவுச்சீட்டின் பக்கங்களின் எண்ணிக்கை 64 இலிருந்து 48 ஆகக் குறைக்கப்பட்டுள்ள போதிலும், கடவுச்சீட்டு வழங்குவதற்கான 6,000 ரூபா கட்டணம் குறைக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய கடவுச்சீட்டுகளில் ‘Observation’ மற்றும் ‘Extension’ பக்கங்கள் இல்லாததுடன், அச்சுத் தரம் குறைவாக இருப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குடிவரவு முத்திரைகளின் மை மறுபக்கத்திலும் ஊடுருவுவது போன்ற பிரச்சினைகள் காரணமாக சில நாடுகளில் கடவுச்சீட்டுகள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் தரப் பிரச்சினைகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பல நாடுகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 50 இலட்சம் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், e-Passport முறையை அறிமுகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.