யாழ்ப்பாணத்துடனான குடும்பத் தொடர்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்!
நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது தாயார் சங்கீதாவின் இலங்கைப் பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது குடும்பத் தொடர்பு குறித்து நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நேர்காணலில் தனது குடும்பப் பின்னணி குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், தனது தாயார் இலங்கையின் வடக்குப் பகுதியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த பின்னர் குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“எனது அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அதாவது, இலங்கையின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர். பின்னர் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறினர்” என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் தனது தாத்தாவுக்குச் சொந்தமான சொத்துகளில் ஒன்று, தனது குடும்பத்தின் கடந்த காலத்தையும் பூர்வீகத் தொடர்பையும் நினைவுபடுத்தும் முக்கியமான இடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தான் இயக்கவுள்ள ‘சிக்மா’ (Sigma) திரைப்படத்திற்கான படப்பிடிப்புத் தளமாக இலங்கையையும் பரிசீலித்ததாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். இதற்காக தனது படக்குழுவினர் இலங்கைக்கு சென்று பல்வேறு இடங்களை பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்தத் திட்டம் இறுதியில் கைகூடவில்லை என தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பை நடத்துவதற்கு விருப்பம் உள்ளதாகவும், அந்நாட்டின் இயற்கை அழகையும் தனித்துவமான இடங்களையும் தனது திரைப்படத்தின் ஊடாக வெளிப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜேசன் சஞ்சயின் இந்தப் பேச்சு, அவரது குடும்பத்திற்கும் இலங்கைக்கும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான நீண்டகால பூர்வீகத் தொடர்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஜேசன் சஞ்சயின் தாயாரான சங்கீதா, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

