உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!


2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இன்று (10.08.2026) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை மையங்களில் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்முறை 264,496 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 107,814 தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் உட்பட மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

பரீட்சை மண்டபங்களுக்குள் கைப்பேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் குறிப்புகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை மண்டபத்தினுள் பேசுதல், விடைத்தாள்களைப் பரிமாறிக்கொள்ளுதல் அல்லது பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான முறைகேடுகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக, பரீட்சைப் பெறுபேறுகளை இடைநிறுத்துவது உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளில் மண்டப மேலதிகாரிகள் மற்றும் மேலதிக உதவி மேலதிகாரிகளுக்கு மாத்திரமே கைப்பேசிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடமைகளில் தவறும் ஊழியர்களுக்கு எதிராகவும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இதுவரை கடுமையான காலநிலை அல்லது அவசரச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அசாதாரண சூழ்நிலைகள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.