நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!


கொலம்பியாவில் உயிரிழப்புகளையும் பரவலான சேதங்களையும் ஏற்படுத்திய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்களுக்கு இலங்கை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தனது எக்ஸ் தளப் பதிவில், கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரமான உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதங்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலம்பியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அனர்த்தத்தில் குறைந்தது 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் காலி மற்றும் பெரேரா நகரங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.