லலித் – குகன் காணாமல் போன வழக்கு: கோட்டாபய ராஜபக்ஷ இணையவழியில் சாட்சியம் வழங்க உத்தரவு!


2011ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இணையவழி ஊடாக சாட்சியமளிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திலிருந்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்திற்கு இணையவழி மூலம் கோட்டாபய ராஜபக்ஷ சாட்சியமளிக்கவுள்ளார்.

2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்பில், அவர்களது உறவினர்களால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷவிடம் சாட்சியம் பெறுவதற்காக, 2019ஆம் ஆண்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.