மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: ‘கஞ்சிபானி இம்ரானின்’ நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை!


கொழும்பு, மாளிகாவத்தை – சங்கராஜ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினராகக் குறிப்பிடப்படும் ‘கஞ்சிபானி இம்ரானின்’ நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் இரு அடையாளம் தெரியாத நபர்கள், குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த நபர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து, சந்தேகநபர்களை அடையாளம் காணவும் அவர்களைக் கைது செய்யவும் மாளிகாவத்தை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.