நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை!


நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்படுவதன் மூலம், தற்போது முன்னெடுக்கப்படும் உடற்பரிசோதனைகளை நவீன முறையில் மேற்கொள்ள முடியும் எனவும், இதன் மூலம் சிறைச்சாலை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஸ்கேனர் இயந்திரங்கள் சிறைச்சாலைகளில் நிறுவப்பட்ட பின்னர், கைதிகளுக்குக் கொண்டு வரப்படும் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் ஸ்கேனர் இயந்திரங்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே சிறைச்சாலைகளுக்குள் அனுமதிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறைச்சாலைச் சுவர்களுக்கு வெளியிலிருந்து உள்ளே வீசப்படும் சட்டவிரோதப் பொதிகளைத் தடுப்பதற்காக, சிறைச்சாலை நிர்வாகத்துடன் இணைந்து புதிய பாதுகாப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.