போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை – சமந்த வித்யாரத்ன


கடந்த காலங்களில் விளையாட்டுத் துறையை முறையாக மேம்படுத்தத் தவறியதன் விளைவாக, தற்போது விளையாட்டு மைதானங்களைப் பராமரிப்பதை விட சிறைச்சாலைகளைப் பராமரிப்பதற்கும் புதிய சிறை முகாம்களை அமைப்பதற்கும் அரசாங்கம் அதிக நிதியை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழித்து, சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னர் நாட்டில் “சட்டம் என்பது ஏழை மக்களுக்கு மட்டுமே; செல்வந்தர்களும் அதிகார வர்க்கத்தினரும் தப்பித்துவிடுவார்கள்” என்ற நிலை காணப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளதாகவும், குற்றச் செயல்களில் ஈடுபட்ட பலமிக்கவர்கள், கோடீஸ்வரர்கள் மற்றும் சூழ்ச்சியாளர்கள் நீதிமன்ற உத்தரவுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

செல்வாக்குமிக்கவர்கள் சிறைக்குச் செல்லத் தொடங்கியுள்ள நிலையில், சிறைச்சாலைகளுக்குள் இருந்தவாறே சாதாரண கைதிகளைத் தூண்டிவிட்டு அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை முன்னெடுக்க சிலர் முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறான எந்தவொரு சூழ்ச்சிக்கும் அரசாங்கம் ஒருபோதும் தலைவணங்காது என வலியுறுத்திய அமைச்சர் சமந்த வித்யாரத்ன, நாட்டிலிருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்க முழு நாடும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.