கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடை விவகாரம்: சமூக நீதிக்கட்சி கள விஜயம்!


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 9 சுகாதார உதவியாளர்கள், தங்களது மத மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பேணும் வகையில் சீருடை அணிவதற்கு வைத்தியசாலைப் பணிப்பாளரினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான சீருடை தொடர்பான அரச சுற்றுநிருபத்தில், மத மற்றும் கலாச்சார அடையாளங்களைப் பேணும் வகையில் சீருடை அணிவதற்கு தெளிவாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அதனைப் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த சுற்றுநிருபத்திற்கு முரணாக வைத்தியசாலைப் பணிப்பாளர் செயற்பட்டுள்ளதாகவும், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பான முறைப்பாடு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, சமூக நீதிக்கட்சியின் தலைவர்கள் நேற்று (09.08.2026) வைத்தியசாலைக்கு நேரடி கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தில் சமூக நீதிக்கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர், பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷாத் அஹமத், பொருளாளர் சட்டத்தரணி இல்ஹாம் ஹஸனலி, தேசிய அமைப்பாளர் இர்பான் பன்னா, டிஜிட்டல் ஊடக செயலாளர் ஸப்ரீன் அஹமத் மற்றும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்னின்று செயற்பட்டு வரும் நற்பிட்டிமுனை அல் அக்ஸா பாடசாலையின் அதிபர் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களை நேரில் சந்தித்து விடயங்களை கேட்டறிந்த சமூக நீதிக்கட்சியின் தலைவர்கள், சீருடை அணிவதற்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான காரணத்தை வைத்தியசாலைப் பணிப்பாளரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினர்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் உடனடியாக முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இப்பிரச்சினையை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லவும் சமூக நீதிக்கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.