போக்சோ சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: அரியலூர் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை எஸ்.எஸ்.ஐ சுமதி அதிரடி பணியிட மாற்றம்!


அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களிடம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வெளியான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அரியலூர் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை எஸ்.எஸ்.ஐ சுமதி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

18 வயதுக்குட்பட்ட பெண்களிடம் பேசினாலே போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக்கு செல்ல நேரிடும் என அவர் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவரை ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையில் இருந்து விடுவித்து, சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முதலமைச்சர் விஜய் காவல்துறையில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை என்ற தனிப்பிரிவை தொடங்கி வைத்தார். இதையடுத்து மாநிலம் முழுவதும் இந்த சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் காவல் உட்கோட்டங்களில் தலா 4 காவலர்களை கொண்ட இரண்டு ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், அரியலூர் உட்கோட்ட படையில் சிறப்பு பாதுகாப்பு அலுவலராக சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.ஐ சுமதி கலந்து கொண்டு மாணவர்களிடம் போக்சோ சட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.

அப்போது, “18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளிடம் யாராவது பேசினாலும், அவர்களுக்கு ‘ஹாய்’ என குறுஞ்செய்தி அனுப்பினாலும் அல்லது அவர்களிடம் அசிங்கமாகவும், அருவருப்பாகவும் பேசினாலும் போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக்கு செல்ல நேரிடும்” என மாணவர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அது வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. வீடியோவை பார்த்த பலரும், “18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களிடம் சாதாரணமாக பேசுவது கூட போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் என கூறுவது தவறான புரிதலை ஏற்படுத்தும்” என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

அதேவேளை, சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.ஐ சுமதியை அரியலூர் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை பிரிவில் இருந்து விடுவித்து, அரியலூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.