நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!


நாட்டின் நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீரையும் மின்சாரத்தையும் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் எல். எஸ். சூரியபண்டார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நாட்டின் நீர்த்தேக்கங்களில் 44 முதல் 45 சதவீதம் வரையிலான நீர் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'எல் நினோ' காலநிலை தாக்கத்துக்கு மத்தியில், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், எதிர்பார்த்த அளவில் மழை பெய்யாத பட்சத்தில், தற்போதுள்ள நீர்வளத்தைப் பயன்படுத்தி நிலைமையை சமாளிக்கும் வகையில் மாற்றுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பதிவாகியுள்ளதாகவும், சில பகுதிகளில் பெய்த மழையும் 10 முதல் 15 மில்லிமீட்டர் வரையிலான குறைந்த அளவிலேயே இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், எதிர்கால நீர்த் தேவைகளை கருத்தில் கொண்டு, நீரையும் மின்சாரத்தையும் பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்துவது அவசியம் என எல். எஸ். சூரியபண்டார வலியுறுத்தியுள்ளார்.