இந்த ஆண்டில் இதுவரை 18 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் – 13 பேர் உயிரிழப்பு!


இலங்கையில் அண்மைக் காலமாக துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 18 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் பிரிவுகளில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குகின்றன.

இந்த ஆண்டில் பதிவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சட்டவிரோத ஆயுதப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் நாடளாவிய ரீதியில் விசாரணைகள் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.