நச்சு இரசாயனங்களால் பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுக்க புதிய சட்டம்!


நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்த அமைச்சர், வாழைப்பழம், மாம்பழம் மற்றும் பப்பாளிப்பழம் போன்றவற்றைப் பழுக்க வைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவது சமூகத்தில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன் அடுத்த கட்டமாக, இவ்வாறான நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தும் இடங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், போதிய விழிப்புணர்வு வழங்கப்பட்ட பின்னரும் இந்த சட்டவிரோத நடைமுறையை வியாபாரிகள் தொடர்ந்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வழக்குத் தொடரப்படும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.