மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடி தலையிட வேண்டும் - முதல்வர் விஜய் கோரிக்கை!


மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, கர்நாடகாவுக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது என தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகம் உள்ளிட்ட கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து ஏமாற்றம் அளிப்பதாகவும், அந்த பதிலை திரும்பப் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவிரி நீரில் பாசனம் பெறும் அனைத்து மாநிலங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு செல்லும் நீரின் அளவை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் உரிய அனுமதியின்றி செயல்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கர்நாடகா மேகதாது அணை கட்டும் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது எனவும் முதல்வர் விஜய் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டாட்சித் தத்துவத்தையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் பாதுகாக்க பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் எனவும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜ் பூஷன் பார்லி வழங்கிய பதிலை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.