டில்லியில் போராட்டம் நடத்தியவர்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களில் குற்றப் பின்னணி இல்லாத இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின்போது, அதிகளவில் பொலிஸார் குவிக்கப்பட்டமை மற்றும் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டமை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதேவேளை, போராட்டங்களின்போது காயமடைந்த பொலிஸாரின் குடும்பத்தினரும் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (ஜூலை 28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
விசாரணையின் போது உத்தரவிட்ட நீதிபதிகள்,
- நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது.
- குற்றப் பின்னணி இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தால், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
- போராட்டம் தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் காணொளி ஆதாரங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
- கைது செய்யப்பட்ட 18 வயதிற்குட்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
- போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது.
என உத்தரவிட்டனர்.
மேலும், போராட்டங்கள் நடைபெற்ற மகாராஷ்டிரா, பீகார், உத்தரப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், “இந்த சம்பவத்தில் நிச்சயமாக முற்றிலும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். யாரெல்லாம் அத்துமீறி செயல்பட்டார்களோ, அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
