இன்று முதல் முட்டை விலைகள் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!


இலங்கையில் இன்று (20) முதல் முட்டை விலைகள் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு வெள்ளை முட்டையின் சில்லறை விலை ரூ. 41 ஆகவும், ஒரு சிவப்பு முட்டையின் சில்லறை விலை ரூ. 42 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குளியாபிட்டியவில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இந்த விலை உயர்வுக்கு அரசாங்கத்தின் கொள்கைகளே முக்கிய காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மக்காச்சோள இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டதால் கோழித் தீவனத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளூர் மக்காச்சோள உற்பத்தி முட்டைத் தொழிலின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

தீவனப் பற்றாக்குறையால், உற்பத்தியாளர்கள் அரிசி உள்ளிட்ட மாற்றுத் தீவனங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கோழிகளின் ஆரோக்கியம் மற்றும் செரிமானம் பாதிக்கப்பட்டு, முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், சில நேர்மையற்ற வியாபாரிகள் கால்நடைத் தீவனத்தில் ஆபத்தான இரசாயனங்கள் மற்றும் மருந்துகளை கலப்பதால் ஏராளமான கோழிகள் உயிரிழந்துள்ளதுடன், பண்ணையாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தீவனப் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடி தீர்வு வழங்காவிட்டால், நாட்டின் முட்டைத் தொழில் மேலும் பாதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.