ஐபோனுக்கு பதிலாக தாடி வளர்க்கும் எண்ணெய் அனுப்பிய பிளிப்கார்ட்: வாடிக்கையாளருக்கு ரூ.1.8 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு!
இந்தியாவில் ஐபோன் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு அதற்குப் பதிலாக தாடி வளர்க்கும் எண்ணெய் அனுப்பப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.8 லட்சம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை பொவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதி பிளிப்கார்ட் இணையதளம் மூலம் வட்டி இல்லா மாதத் தவணை முறையில் ரூ.1,11,793 மதிப்புள்ள ‘ஆப்பிள் ஐபோன் 14 புரோ’ கையடக்கத் தொலைபேசியை ஆர்டர் செய்தார்.
ஆனால், அவருக்கு வந்த பார்சலை திறந்தபோது அதில் ஐபோனுக்கு பதிலாக ‘தாடி வளர்க்கும் எண்ணெய்’ இருந்துள்ளது. இது தொடர்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் அளித்த போதிலும், உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, அவர் மும்பை புறநகர் கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பிளிப்கார்ட், அதன் விற்பனையாளர் ‘இன்டர்நேஷனல் வேல்யூ ரீடெய்ல்’ மற்றும் ‘ஆப்பிள் இந்தியா’ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், இந்த இழப்புக்கு பிளிப்கார்ட் மற்றும் அதன் விற்பனையாளர் கூட்டுப் பொறுப்பு என தெரிவித்தது. மேலும், வாடிக்கையாளருக்கு ரூ.1,11,793 தொகையை 2023 ஏப்ரல் 22 முதல் 9 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்கவும், மன உளைச்சல் மற்றும் வழக்குச் செலவுக்காக சேர்த்து மொத்தம் ரூ.1.8 லட்சம் வரை 45 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
