மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயருமா? – ஆகஸ்ட் முதல் வார பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்தத் திட்டம் தமிழகத்தைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் தேர்தல் வாக்குறுதியாக இடம்பெற்று வரவேற்பைப் பெற்றது. இதேவேளை, 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.
தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியின்படி ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்பத் தலைவிகளிடையே நிலவி வருகிறது.
இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், அமைச்சரவைக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ஊழலுக்கு எதிரான முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஆதரவு வழங்கி வருவதாகவும், தற்போதைய ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள முதல் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. எனினும், இதுகுறித்த இறுதி முடிவு பட்ஜெட் தாக்கலின்போதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)