நீர் வெட்டு அச்சம் தேவையில்லை – அடுத்த மாதங்களுக்கும் போதுமான நீர் கையிருப்பு!


எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு போதுமான மழை வீழ்ச்சி கிடைக்காவிட்டாலும், லபுமக மற்றும் களத்துவாவி நீர்த்தேக்கங்களில் தற்போது காணப்படும் நீர் மட்டம் தடையற்ற நீர் விநியோகத்தை மேற்கொள்ள போதுமானதாக உள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எல் நினோ காலநிலை தாக்கம் காரணமாக எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் எதிர்பார்த்ததை விட வறண்ட காலநிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள நீர் கொள்ளளவை கருத்தில் கொள்ளும்போது, அடுத்த மூன்று மாதங்களுக்கு பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு நீர் இருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை நீர் வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்த அமைச்சர், குறைந்தது எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நீர் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனினும், காலநிலை மாற்றங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.