84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை!
ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 61 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 84,091 ஆக உயர்ந்துள்ளது.
மாத வாரியான தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் மட்டும் 28,717 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது இந்த ஆண்டில் அதிகளவிலான பாதிப்புகள் பதிவான மாதமாகும். அதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் 21,533 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக மே மாதத்தில் 8,590 பேரும், ஏப்ரலில் 5,651 பேரும், மார்சில் 6,013 பேரும், பெப்ரவரியில் 5,721 பேரும், ஜனவரியில் 7,866 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாகப் பார்க்கையில், அதிகளவிலான பாதிப்புகள் கம்பஹா மாவட்டத்தில் 17,850 (21.23%) ஆகவும், கொழும்பு மாவட்டத்தில் 16,716 (19.88%) ஆகவும் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து கண்டி (5,793), மாத்தறை (5,730) மற்றும் களுத்துறை (5,493) மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மாகாண அடிப்படையில், மொத்த நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு 44,552 தொற்றுகள் (52.98%) பதிவாகியுள்ளன. தென் மாகாணத்தில் 18,127 தொற்றுகள் (21.55%) பதிவாகி இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும், மத்திய மாகாணத்தில் 6,674 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 6,898 பேரும், வடமேல் மாகாணத்தில் 4,463 பேரும், வடமத்திய மாகாணத்தில் 1,548 பேரும், வட மாகாணத்தில் 1,446 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
29ஆவது தொற்றியல் வாரத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 2,391 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும், 175 உயர் அபாயம் கொண்ட சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்குவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் தற்போது 0.07 சதவீதமாக உள்ள நிலையில், நாடு முழுவதும் டெங்கு பரவல் அதிகரித்து வருவதால், நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து, சுற்றுப்புறச் சுத்தத்தை பேணுவதுடன், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
