உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!


உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (31) சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.71% குறைந்து 82.16 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 1.16% குறைந்து 88 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, முர்பான் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.60% சரிவடைந்து 85.71 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதனிடையே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைச் சூத்திரத்தின்படி மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளது.

எனினும், கூட்டுத்தாபனம் தற்போது பெற்றுள்ள இலாபத்தை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் எதுவும் இல்லை என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிதி தொடர்பான குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.