மனித இதயத்திற்குள் 'குட்டி மூளை' – அமெரிக்க ஆராய்ச்சியில் ஆச்சரிய தகவல்!


மனித இதயத்திற்குள் 'குட்டி மூளை' போன்று செயல்படும் தனித்துவமான நரம்பு மண்டலம் ஒன்று இருப்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இதயத்தைச் சுற்றியுள்ள திசுக்களில் நரம்பணுக்களால் உருவான 'உள் இதய நரம்பு மண்டலம்' (Intrinsic Cardiac Nervous System) செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நரம்பு மண்டலம், மூளையிலிருந்து உத்தரவு வரும் வரை காத்திருக்காமல், நரம்பணுக்களுக்கு இடையே தகவல்களை விரைவாக பரிமாறிக்கொண்டு இதயத் துடிப்பை தானாகவே ஒழுங்குபடுத்துகிறது.

மேலும், உடலியல் மாற்றங்கள் மற்றும் மனஅழுத்தம் போன்ற சூழ்நிலைகளில் இதயத்தைப் பாதுகாக்கும் உள்ளூர் கட்டுப்பாட்டு மையமாகவும் இது செயல்படுகிறது.

குறிப்பாக, இதயத் துடிப்பு அசாதாரணமாக அதிகரிக்கும் நேரங்களில், இந்த நரம்பணுக்கள் அதனை கட்டுப்படுத்தி இயல்பான நிலைக்குக் கொண்டுவர உதவுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் இதயத்திலும் இதேபோன்ற நரம்பு அமைப்பு இருப்பதால், எதிர்காலத்தில் இதய நோய்கள் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு (Arrhythmia) போன்ற பாதிப்புகளுக்கான புதிய சிகிச்சை முறைகளை உருவாக்க இந்த கண்டுபிடிப்பு முக்கிய பங்காற்றும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.