மோட்டார் சைக்கிள் மூலமான அவசர மருத்துவ சேவையை அறிமுகப்படுத்தும் 'சுவ செரிய' அறக்கட்டளை!


1990 சுவ செரிய அறக்கட்டளை, அவசர மருத்துவ உதவியை மேலும் விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் மோட்டார் சைக்கிள் மூலமான புதிய அவசர மருத்துவ சேவையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.

அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை குறுகிய நேரத்தில் சென்றடைவதற்காக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் நகர்ப்புறங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் இந்த சேவை செயல்படுத்தப்படவுள்ளது.

ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்னரே, நோயாளிகளுக்கு முதலுதவி மற்றும் அத்தியாவசிய மருத்துவச் சிகிச்சைகளை உடனடியாக வழங்குவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என சுவ செரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதுடன், அடிப்படை மருந்துகள் மற்றும் அவசர மருத்துவ உபகரணங்களுடன் கூடிய மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்தத் திட்டம் முதற்கட்ட முன்னோடித் திட்டமாக (Pilot Project) கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களை மையமாகக் கொண்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறக்கட்டளை அறிவித்துள்ளது.