பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை – பலர் காயம்!
பாணந்துறை கடற்கரையில் ஜெல்லிமீன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கடலில் குளிக்க வருபவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதால், கடலில் குளித்துக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை கடற்கரை உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
நேற்று (26) பிற்பகல் கடற்கரைக்கு வருகை தந்தவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், நேற்று பிற்பகல் மட்டும் 300-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான ஜெல்லிமீன்கள் பாணந்துறை கடற்கரைப் பகுதிக்கு ஒதுங்கியுள்ளதாக உயிர்காப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலர் சிகிச்சைக்காக பாணந்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்கும் நோக்கில், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் கடலில் குளித்துக் கொண்டிருந்த அனைவரையும் உடனடியாக கரைக்கு அழைத்து வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
எனவே, பாணந்துறை கடற்கரைக்கு வருகை தரும் பொதுமக்கள், அடுத்த சில நாட்களுக்கு கடலில் இறங்கும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பாதுகாப்புப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
