வெலிக்கடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணியாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு அதிகாரிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, அவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
கடந்த 6 ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
தகவல்களின் படி, கடந்த 5 ஆம் திகதி ஏற்பட்ட பதற்ற நிலைமை கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, மறுநாள் காலை கைதிகளுக்கு உணவு வழங்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கைதிகளுக்கிடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டதுடன், அதைத் தடுக்கச் சென்ற அதிகாரிகள் மீது கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதேவேளை, பல்லன்சேன சிறைச்சாலையிலிருந்து புதிய நியமனத்துடன் வந்திருந்த பிரதான ஜெயிலரும் நிலைமையை கட்டுப்படுத்த முயன்றபோது தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை சக அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டபோதிலும், நிலைமையை கட்டுப்படுத்த முயன்ற பல அதிகாரிகள் மீது கைதிகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வன்முறைச் சம்பவத்தில் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
