நாடளாவிய ரீதியில் 76,000 ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000-ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, டெங்கு காரணமாக 53 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக, அந்தப் பிரிவு நேற்று (19) இரவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். ஆண்டின் இதுவரை கம்பஹா மாவட்டத்தில் 15,910 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 15,110 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாத்தறை மாவட்டத்தில் 5,330 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,111 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,010 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 4,295 பேரும், காலி மாவட்டத்தில் 4,260 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே, 2026 ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மட்டும் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலைமை காரணமாக, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாகப் பராமரித்து, நுளம்பு பெருகும் இடங்களை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
