ஜனாதிபதி தலைமையில் கடற்படையில் இணைந்தது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் ‘சமுத்ரவிஜய’!
இலங்கைக் கடற்படையின் கடல்சார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நோக்கில், அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், நேற்று (04) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய வளாகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.
2025 டிசம்பர் 2 ஆம் திகதி அமெரிக்காவால் இலங்கைக்கு கையளிக்கப்பட்ட இந்தக் கப்பல், நவீனமயமாக்கப்பட்ட பின்னர் 2026 பெப்ரவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் பால்டிமோரிலிருந்து கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
கடல்சார் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், கடல் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் சர்வதேச கடல்சார் சட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பணிகளுக்கு இந்தக் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச கடல்சார் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் ‘சமுத்ரவிஜய’ முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வின் போது கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் கயான் விக்கிரமசூரிய, பணியில் இணைப்பதற்கான அதிகாரப் பத்திரத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார். தொடர்ந்து கப்பலின் பெயர்ப் பலகை மற்றும் உத்தியோகபூர்வ இலச்சினை திறந்து வைக்கப்பட்டதுடன், ஜனாதிபதி கப்பலில் கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டார்.



