லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை - வெளியான அறிவிப்பு!


உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி போன்ற சவால்கள் காணப்பட்டாலும், ஜூன் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்ந்தும் 4,765 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

அதேவேளை, 5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டர் 1,910 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டர் 890 ரூபாய்க்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.

நிறுவனத்தின் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான விற்பனை வளர்ச்சி மூலம் கிடைத்துள்ள நிதி வலிமையின் காரணமாகவே நுகர்வோருக்கு இந்த நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை உயர்வு தொடர்பான எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில், விலைகள் மாற்றமின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பது நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.