பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை!


வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது இன்று (06) முற்பகல் 11.30 மணி முதல் நாளை (07) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60–70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், அந்த பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையும், மேலும் கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் மணிக்கு 50–60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், அவை அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் நிலப்பரப்பிற்குள் ஊடுருவக்கூடிய அபாயமும் காணப்படுவதாகவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.